28 January 2015

இரண்டாம் தாரம்

05 March 2013

6. ஆத்ம ஜெயம்

கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள்
கவர்ந்திட மாட்டாவோ?-அட
மண்ணில் தெரியுது வானம்,அதுநம்
வசப்பட லாகாதோ?
எண்ணி யெண்ணிப்பல நாளு முயன்றிங்
கிறுதியிற் சோர்வோமோ?-அட,
விண்ணிலும் மண்ணிலும் கண்ணிலும் எண்ணிலும்
மேவு ப்ராசக்தியே!

என்ன வரங்கள்,பெருமைகள்,வெற்றிகள்,
எத்தனை மேன்மைகளோ!
தன்னை வென்றாலவை யாவும் பெறுவது
சத்திய மாகுமென்றே
முன்னை முனிவர் உரைத்த மறைப் பொருள்
முற்றுமுணர்ந்த பின்னும்
தன்னை வென்றாளும் திறமை பெறாதிங்கு
தாழ்வுற்று நிற்போமோ?

04 March 2013

5. உறுதி வேண்டும்

மனதி லுறுதி வேண்டும்,
வாக்கினி லேயினிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்;
தனமும் இன்பமும் வேண்டும்,
தரணியிலே பெருமை வேண்டும்.
கண் திறந்திட வேண்டும்,
காரியத்தி லுறுதி வேண்டும்;
பெண் விடுதலை வேண்டும்,
பெரிய கடவுள் காக்க வேண்டும்,
மண் பயனுற வேண்டும்,
வானகமிங்கு தென்பட வேண்டும்;
உண்மை நின்றிட வேண்டும்.
ஓம் ஓம் ஓம் ஓம்.

24 January 2013

4. விடுதலை வேண்டும்

ராகம் - நாட்டை
பல்லவி

வேண்டுமடி எப்போதும் விடுதலை,அம்மா;

சரணங்கள்

1. தூண்டு மின்ப வாடை வீசு துய்ய தேன் கடல்
   சூழ நின்ற தீவிலங்கு சோதி வானவர்
   ஈண்டு நமது தோழ ராகி எம்மோ டமுதமுண்டு குலவ
   நீண்ட மகிழ்ச்சி மூண்டு விளைய
   நினைத்திடு மின்பம் அனைத்தும் உதவ                                    (வேண்டுமடி)

2. விருத்தி ராதி தானவர்க்கு மெலிவ தின்றியே,
   விண்ணு மண்ணும் வந்து பணிய மேன்மை துன்றியே
   பொருத்த முறநல் வேத மோர்ந்து
   பொய்ம்மை தீர,மெய்ம்மை நேர
   வருத்த மழிய வறுமை யொழிய
   வையம் முழுதும் வண்மை பொழிய                                        (வேண்டுமடி)

3. பண்ணில் இனிய பாடலோடு பாயு மொளியெலாம்
   பாரில் எம்மை உரிமை கொண்டு பற்றி நிற்கவே,
   நண்ணி யமரர் வெற்றி கூற
   நமது பெண்கள் அமரர் கொள்ள
   வண்ண மினிய தேவ மகளிர்
   மருவ நாமும் உவகைதுள்ள.                                                          (வேண்டுமடி)

23 January 2013

3. விடுதலை-சிட்டுக்குருவி

பல்லவி

விட்டு விடுதலை யாகிநிற் பாயிந்தச்
சிட்டுக் குருவியைப் போலே

சரணங்கள்

1. எட்டுத் திசையும் பறந்து திரிகுவை
   ஏறியக் காற்றில் விரைவொடு நீந்துவை
   மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ்
   வானொளி யென்னும் மதுவின் சுவையுண்டு.            (விட்டு)

2. பெட்டையி னோடின்பம் பேசிக் களிப்புற்றுப்
   பீடையிலாத தொர் கூடு கட்டிக்கொண்டு
   முட்டைதருங் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி
  முந்த வுணவு கொடுத்தன்பு செய்திங்கு.                          (விட்டு)

3. முற்றத்தி லேயுங் கழனி வெளியிலும்
   முன்கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு
   மற்றப் பொழுது கதைசொல்லித் தூங்கிப்பின்
   வைகறை யாகுமுன் பாடி விழிப்புற்று.                          (விட்டு)